அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2024 முன்னிட்டு, "புதிய வாய்ப்புகளும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (03.12.2024) அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2024 முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளின் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்தும் பொருட்டு "புதிய வாய்ப்புகளும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.இக்கருத்தரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2024 முன்னிட்டு, 3 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு MTC POLYMERS & PACKAGING, AMAZON WAREHOUSE, SAMARTHANAM TRUST ஆகிய தனியார் நிறுவனங்களில்; வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.02 இலட்சம் வீதம் ரூ.79.56 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர மோட்டார் வாகனங்களையும், 36 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.16,199/- வீதம் ரூ.5.83 இலட்சம் மதிப்பில் திறன்பேசிகளையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பில் செயற்கை உறுப்புகளையும், மகளிர் திட்டம் மூலம் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.60 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.04 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் என மொத்தம் 181 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெறுவது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் குறித்தும், பல்வேறு அரசுத்துறை சார்பில் அரசு திட்டப் பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மூன்று சக்கர வாகனம், இலவச வீட்டுமனைப்பட்டா, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. அதனை எவ்வளவு விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட முடியுமோ அதை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் மூன்று சக்கர வாகனங்களும், இலவச வீட்டுமனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பை பொருத்தவரையில் அரசு வேலை வாய்ப்புகளில் நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு; தயார் செய்வதற்கு அனைத்து வாய்ப்புகளையும் மாவட்ட நிர்வாகம் உருவாக்கித் தருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலை வாய்ப்புகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, முடிந்த அளவுக்கு குறிப்பிட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளை நிறுவனத்தில் பணியமர்த்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்வதற்கு அரசுத்துறைகள் மூலம் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிலான உதவிகள் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய சிரமங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கை ஏற்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் அனுபவங்களை உணர்வு ரீதியாக புரிந்து கொள்ளும் வகையிலும் பிரத்தேகமாக அமைக்கப்பட்ட இருட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
மேலும், இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்ட அரசுத்துறை சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு, அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.பின்னர், அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2024 முன்னிட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2024 முன்னிட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
0
Leave a Reply